கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காந்தி சிலை மாற்றப் விவகாரத்தில் காங்கிரஸ் ஜோதிமணி எம்பி அனுமதியின்றி தர்ணாவில் ஈடுபட்டதால் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்து வேனில் ஏற்றினர்.
கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட காந்தி சிலையை மாவட்ட நிர்வாகம் அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக காந்தி சிலையை வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட காந்தி சிலை வரலாற்று பின்னணி உள்ள சிலை. அதை மாவட்ட நிர்வாகம் அகற்றியது தவறான செயல்.
இந்த சிலை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டால் இதற்கு யார் பொறுப்பு ஏற்பது? மக்களவை உறுப்பினராகிய நான் இதை ஏற்க முடியாது. இந்த சிலை வைக்க கடந்த 12ம் தேதி ஒரே நாளில் நகராட்சியில் தீர்மானம் போடப்பட்டு, வழக்கறிஞர் கருத்து மற்றும் தடையின்மை சான்று பெற்று அதே நாளில் வேலை தொடங்கி உள்ளனர்.
தரமற்ற முறையில் அவசரகதியில் வைக்கப்பட்டுள்ள இந்த காந்தி சிலையை நாளை கரூர் வருகை தரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க மாட்டார் என நம்புகிறோம். அப்படி மீறி திறந்து வைத்தால் கரூர் மக்களவை உறுப்பினர் என்ற முறையில் நானே நேரடியாக நின்று முதல்வரிடம் கேள்வி கேட்பேன் என்றார்.
காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர் அதற்கு காங்கிரஸ் கட்சியினர் மறுத்ததால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு கைது செய்து வேனில் ஏற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.