கோவையில் இன்று முதல் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை செல்போன் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. தற்போது 6 வது கட்ட நிலையில் ஊரடங்கு செயல்பட்டு வரும் சூழ்நிலையில், அதில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அந்தந்த மாவட்டங்களில் கொரோனாவின் அளவைப் பொருத்து மாவட்ட அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் எடுக்கும் முடிவின் அடிப்படையில் விதிக்கப்படும் ஊரடங்கு விதிமுறைகளை மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
அதேபோல் கொரோனா அதிகரிக்கும் சமயங்களில், பாதிப்பு அதிகரிக்கும் பகுதியில் உள்ள வியாபாரிகளும், வியாபாரிகள் சங்கத்தினரும் தாமாகவே முன்வந்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக மொபைல் சேல்ஸ் மற்றும் பழுது நீக்கும் சங்கம் கோவையில் ஐந்து நாட்கள் அதாவது ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை கடைகளை அடைப்பதாக அறிவித்துள்ளது.
குறிப்பாக காந்திநகரில் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதால் மாநகராட்சிகள் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கோவையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.