கடலூர் கடலூர் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் நகராட்சிக்கு உட்பட்டு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் நகராட்சி சார்பாக வாடகை வசூலித்து கொண்டிருந்தனர். திடீரென்று இரண்டு நாட்களுக்கு முன் கடையில் வாடகை தொகையை 10 மடங்கு நகராட்சி உயர்த்தியுள்ளது அதாவது 1000 ரூபாய் வாங்கப்பட்ட கடைகளுக்கு தற்போது பத்தாயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் நகராட்சி அலுவலரிடம் முறையிட்டனர். ஆனால் வாடகை தொகையை குறைக்க முடியாது என கடலூர் நகராட்சி நிர்வாகம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
இதனை அடுத்து அவர்களை கண்டிக்கும் விதமாக 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அனைத்தையும் அடைத்துவிட்டு தற்போது நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளனர். இவர்கள் முன்வைக்கும் கோரிக்கை வாடகை தொகையை குறைக்க வேண்டுமென்பதே. ஒரு மடங்கு இரு மடங்கு உயர்த்தினால் கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் பத்து மடங்கு உயர்த்தியது எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனவும், ஆயிரம் ரூபாய் உள்ள கடை தற்போது பத்தாயிரம் எப்படி எங்களால் கொடுக்க முடியும் என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வியாபாரிகளிடம் தற்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடை வியாபாரிகள் சரியான தீர்வு கிடைக்கும் வரை நகராட்சி அலுவலகத்தை விட்டு விலகப் போவதில்லை எனவும் கூறியுள்ளனர்.