கரூர் அருகே பள்ளிக்கு சென்ற சிறிது நேரத்தில் சிறுவன் எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.
கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் கேஸ் அடுப்பை பழுது பார்க்கும் பணி செய்து வருகிறார். இவரது மகன் பிரசாத் கணபதி பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்.
வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவன் சிறிது நேரத்திலேயே எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பெற்றோர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட மருத்துவமனைக்கு விரைந்த பெற்றோர்களும் உறவினர்களும் ஆசிரியர் தாக்கியதால் தான் எனது மகனின் கை எலும்பு முறிந்து விட்டது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் தீவிரம் அடைய சம்பவ இடத்திற்கு விரைந்த முதன்மை கல்வி அலுவலர் இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் விசாரித்தார். அப்போது தலைமையாசிரியர் அழைத்ததால் இரண்டாம் வகுப்பு ஆசிரியர் சென்ற சமயத்தில் மாணவர்களுக்குள் விளையாடி கொண்டிருந்த பொழுது தவறுதலாக கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் மாணவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.