திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையில் ஈடுபட்டதற்கு சரியான ஆதாரங்களை காட்டுங்கள் மோடி ஜி இல்லையெனில் சிறையில் அடைப்பேன் என்று மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் பாஜக தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பா.ஜ.கவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆனால் பா.ஜ.க வினர் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜி இன்று மதுராபூரில் தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, மறுபடியும் தேர்தல் ஆணையம் மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார். கொல்கத்தாவில் அமித்ஷாவின் நடத்திய பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபட்டதாகவும், ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டற்கும் திரிணாமுல் காங்கிரஸே காரணம் எனக் கூறும் பிரதமர் மோடி, அதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும். அப்படி அவர் நிரூபிக்கவில்லையென்றால் அவரை நான் சிறையில் அடைப்பேன் . எதற்கும் நான் பயப்பட மாட்டேன் என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்.