அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
வட தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ஆம்பன் புயல் வடக்கு நோக்கி கரையை கடந்து விட்டதால் வெப்பம் அதிகரிக்கும் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் அளித்துள்ளது.
மேலும் மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, மாலத்தீவு, கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துள்ளது என தெரிவித்துள்ளது.