வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியிடம் தாலி செயினை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர் .
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா பன்னாள்கிழக்கு கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன்(70) என்பவரின் மனைவி நாகலட்சுமி (68).இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதே மருத்துவமனையில் பண்ணிநேர் மொழியால்புறம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி பிரியதர்ஷினி (32) உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் . இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் நாகலட்சுமி-க்கு பக்கத்தில் உள்ள படுக்கையில் பிரியதர்ஷினியின் இருந்து வந்தார்.
அப்போது சம்பவ தினத்தன்று இரவு மூதாட்டி நாகலட்சுமி கழுத்தில் இருந்த தாலி செயினை அறுத்து அதிலிருந்த தாலி , குண்டுகளை பிரியதர்ஷினி திருடியுள்ளார். இதுகுறித்து ஜெகதீசன் வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரியதர்ஷினி டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் திருடிய தங்கச் செயினை கடையில் அடகு விற்க முயன்ற போது காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.