குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடர்பான அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், திராவிட கழக செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். திமுக மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவது குறித்து சிறப்புரையாற்றினார்.
அப்போது கனிமொழி, மத்தியில் பலம் இருக்கிறது என்ற காரணத்தை வைத்துகொண்டு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான சட்டங்களை பாஜக தன் போக்கில் நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. மக்கள் மத்தியில் பயத்தை, பிரிவினைவாதத்தை கொண்டுவரும் வகையில் சட்டங்களை இயற்றி வருகிறார்கள். குடியுரிமை சட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநிலங்களவையில் அதிமுக குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து நாட்டை கொளிந்தளிக்கும் சூழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளது என தெரிவித்தார்.