Categories
அரசியல் மாநில செய்திகள்

சி ஏ ஏ-வுக்கு எதிராக மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் …!!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் சென்னை கொண்டித்தோப்பு, மண்ணடி தப்பு செட்டி தெருவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இந்த கையெழுத்து இயக்கத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்பட ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது வீடு வீடாக குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய வைகோ, ‘குமரி முதல் இமயம் வரை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எதிர்ப்புகள் உருவாகி உள்ளன. அதன் ஒரு பகுதியாகவே இந்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் கையெழுத்து இயக்கம் நடக்கிறது. கையெழுத்து இயக்கத்தை விரிவுபடுத்தி கோடிக்கணக்கான மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். ஜனநாயகத்தை உடைக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.

இஸ்லாமிய மக்கள் பாகிஸ்தான், வங்கதேசம் நாட்டில் இருந்து இந்தியாவில் குடியேறி பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நிலையில் இந்துத்துவா நாடாக இந்தியாவை மாற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். ஏற்கனவே காஷ்மீரின் தனித்தன்மையை பறித்து இரண்டாகப் பிரித்து காஷ்மீரை பழி வாங்கிவிட்டனர். அயோத்தியில் கோயில் கட்ட முடிவு செய்துள்ள பாஜக அடுத்து பொது சிவில் சட்டத்தை கொண்டுவந்து இந்தியாவை இந்துத்துவா நாடக மாற்ற முயற்சிக்கிறது.

மக்கள் சக்தி கிளர்ந்து எழும்போது அரசால் கூட கட்டுப்படுத்த முடியாது. பல ஆண்டுகளாக உறவினர்களை இழந்து வந்த ஈழத் தமிழர்களுக்கு இடமில்லை என இந்த அரசு கூறியுள்ளது கண்டனத்துக்குரியது’ எனத் தெரிவித்தார்.

Categories

Tech |