உலகம் முழுவதும் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் சமணர்களால் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையானது தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படுகிறது. அதாவது இருள் விலகி வெளிச்சம் பிறக்கும் என்பதைத்தான் தீப ஒளி திருநாள் என்கிறோம். இந்த தீபாவளி பண்டிகையை நாம் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுகிறோம். அதோடு தீப ஒளி திருநாள் என்றும் அழைக்கப்படுவதால் தீபாவளி பண்டிகையின் போது வீடுகளில் விளக்கேற்றி வழிபடுகிறோம். இந்த தீபாவளி பண்டிகையானது கிருஷ்ணர் நரகாசுரனை அழித்ததற்காக தான் கொண்டாடப்படுகிறது. இதே வட இந்தியாவில் ராமர் அயோத்தியில் ஆட்சியில் அமர்ந்த நாளை தான் தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். அதன் பிறகு தீபாவளி பண்டிகையின் போது சிவபெருமானுக்காக கோதா கௌரி விரதம் இருக்கும் நாளாகவும், லட்சுமி மற்றும் குபேரருக்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில் லட்சுமி தேவிக்கு உகந்த நாளாக தீபாவளி பண்டிகையானது கருதப்படுவதால், அந்நாளில் லட்சுமி தேவிக்கு சிறப்பு பூஜை செய்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்த நாளில் தான் குபேரரும் லட்சுமி தேவியை பூஜை செய்து செல்வ வளத்தை பெற்றார் என்று கூறப்படுகிறது. எனவே லட்சுமி தேவி, சரஸ்வதி தேவி, விநாயகப் பெருமான் மற்றும் குபேரர் போன்ற தெய்வங்களை வீட்டில் தீபாவளி பண்டிகையின் போது வழிபட்டால் மிகவும் சிறப்பு. அதன் பிறகு புராண வரலாற்றின் படி லட்சுமி தேவி பூலோகத்துக்கு இறங்கி வரும் போது ஒவ்வொரு வீட்டையும் பார்க்கிறாள். அப்போது எந்த வீடு நேர்த்தியாகவும், தெய்வம் வசிப்பதற்கு சிறந்த இடமாகவும் இருக்கிறது என்பதை தேர்வு செய்கிறாள். அப்படி லட்சுமிதேவி தேர்வு செய்யும் வீட்டில் போய் குடி கொள்கிறாள் என்று கூறப்படுகிறது.
எனவே லட்சுமி தேவியை மகிழ்விப்பதற்காக நாம் தீபாவளி நன்னாளில் வீட்டை சுத்தம் செய்து விளக்குகளை ஏற்றி அவளுடைய வருகைக்காக எதிர்நோக்கி லட்சுமி தேவி மனதை குளிர்விக்க வேண்டும். அப்படி செய்வதனால் லட்சுமி தேவியின் பரிபூரண அருள் கிடைத்து வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். மேலும் தீபாவளி பண்டிகையின் போது அமாவாசையும் சேர்ந்து வருகிறது. அதன்படி வருகிற 24-ஆம் தேதி மாலை 5:39 மணி வரை சதுர்த்தி திதியும், 5:39 மணியிலிருந்து அமாவாசையும் தொடங்குகிறது. இந்த அமாவாசையானது அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5:02 மணி வரை தொடர்கிறது. வட இந்தியாவைப் பொறுத்தவரை தீபாவளி பண்டிகையானது அக்டோபர் 22-ம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 5 நாள் பண்டிகையாக சிறப்பாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.