ஓட்டல் உரிமையாளரிடம் 3 பேர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் ஜெயராமனின் மகன் செந்தில் என்பவர் வசித்து வருகின்றார். இவர் செந்துறை ரேஷன் கடை எதிரில் ஓட்டல் நடத்தி வருகின்றார். அந்த ஓட்டலுக்கு உஞ்சினி கிராமத்தில் வசித்து வரும் வஞ்சினபுரம் கிராம நிர்வாக அலுவலரான சர்ஜித் சென்று ரொட்டி மற்றும் சிக்கன் கிரேவி கேட்டுள்ளார். இதனையடுத்து ஓட்டல் ஊழியர்கள் அவர் கேட்ட பார்சலை கொடுத்ததும் சர்ஜித் அங்கிருந்து சென்று விட்டார். இந்நிலையில் மீண்டும் ஓட்டலுக்கு வந்து பார்சலில் சிக்கன் கிரேவி தரவில்லை என்று கூறியபோது அவருக்கும் செந்திலுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அங்கு உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சியை செந்தில் காட்டிய பின்பு மீண்டும் சிக்கன் கிரேவி கொடுத்ததாக தெரிகின்றது.
அதன்பின் அங்கிருந்து சென்ற சர்ஜித், உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் மீண்டும் ஓட்டலுக்கு வந்துள்ளார். அப்போது செந்திலிடம் தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கி ரோட்டில் இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செந்தில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி சர்ஜித், அவரது சித்தப்பா அறிவழகன், அண்ணன் ரஞ்சித் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஜெயங்கொண்டம் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் சில பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.