வீரசோழன் கிராமத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி பகுதியில் போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தது. இதனையடுத்து நரிக்குடி வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி தலைமையில், மருத்துவ குழுவினர் வீரசோழன் கிராமத்தில் போலி மருத்துவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த கிராமத்தில் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் பஞ்சாட்சரம் என்பவர் தனது குடியிருக்கும் வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது மருத்துவர்களுக்கு தெரியவந்தது. இவர் முறையாக மருத்துவம் பயிலாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலி மருத்துவர் பஞ்சாட்சரத்தை கைது செய்தனர்.