Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமியின் புத்திசாலித்தனம்…. சிக்கி கொண்ட 5 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மில்லில் வேலை பார்த்த சிறுமியை காரில் கடத்திய 5 பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் காரணமாக அந்த சிறுமி தனது தாய் மற்றும் 70 வயது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார். அதன்பின் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசூரில் ஒரு தனியார் மில்லில் சிறுமி தொழிலாளியாக வேலையில் சேர்ந்துள்ளார். ஆனால் கொரானா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் மெய்யூரை சேர்ந்த அண்ணாமலைக்கும் திருமணம் நடைபெற்றது. இது குழந்தை திருமணம் என்பதால் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின்படி அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியுடன் அந்த சிறுமியை மீட்டு பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பாதுகாப்பு மையத்தில் இருந்த அந்த சிறுமியை அவருடைய பாட்டி கடந்த மாதம் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனைதொடர்ந்து அந்த சிறுமி மீண்டும் அரசூரில் தான் பணிபுரிந்த மில்லில் சேர்ந்து விட்டார். அங்கு சிறுமி வேலை செய்து வந்த நிலையில் மில்லுக்கு அவரின் பாட்டி காரில் சென்றுள்ளார். அதன்பின் தன்னுடன் சிறுமியை அனுப்பிவைக்குமாறு பாட்டி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். இதனால் மில் நிர்வாகத்தினரும் சிறுமியை பாட்டியுடன் அனுப்பி வைத்தனர். அப்போது சிறுமியின் பாட்டியுடன் சேர்ந்து அண்ணாமலை மற்றும் அவருடைய உறவினர்களான கவுரி, பஞ்சமூர்த்தி, பழனி ஆகியோரும் வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்களுடன் காரில் செல்வதற்கு சிறுமி மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சிறுமியை காரில் ஏற்றி அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளனர். இதிலிருந்து தப்பிப்பதற்காக சிறுமி தன் போனில் உள்ள “காவலன் செயலி” மூலமாக இதுகுறித்த தகவலை காவல்துறைக்கு அனுப்பிவிட்டார். இதுகுறித்த தகவல் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சேர்ந்துவிட்டது. இதனையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கோபி போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் காவல்துறையினர் செல்போன் சிக்னல் மூலம் மற்றொரு காரில் சிறுமி சென்ற காரை பின் தொடர்ந்து சென்றனர்.

அதன்பின் ஒத்தக்குதிரை அருகில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து சிறுமியை பாதுகாப்பாக மீட்டனர். இதுகுறித்து கடத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலையை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் பாட்டி, அண்ணாமலையின் உறவினர்களான கவுரி, பஞ்மூர்த்தி, பழனி போன்றோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வாறு “காவலன் செயலி (ஆப்)  மூலம் கிடைத்த தகவலை வைத்து 20 நிமிடத்திற்குள் காரில் கடத்தப்பட்ட அந்த சிறுமியை காவல்துறையினர் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |