இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தொடங்கி உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25ம் தேதி நாடு முழுவதும் பல கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதி நிறைவடையும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பரவியுள்ள கொரோனாவுக்கு இந்தியாவில்1,31,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பெற்றுவந்த 54, 385 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 3,868 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 6,664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகராஷ்டிரா தமிழகம் கொரோனாவின் தாக்கத்தால் சிதைந்து போய்யுள்ளன. குறிப்பாக மகராஷ்டிராவில் மட்டும் இதன் பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள 27 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசம் வரை பரவியுள்ள கொரோனா குறைந்த பாடில்லை.
இந்த நிலையில் தான் கொரோனா பாதிக்காத ஒரே மாநிலமாக இருந்து வடகிழக்கு மாநிலம் சிக்கிமில் இன்று ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 60ஆவது நாளான இன்று தான் பாதிக்கப்படாமல் இருந்த ஒரு மாநிலத்த்திலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல மிசோரம், அருணாச்சல பிரதேஷ் ஆகிய ரெண்டு மாநிலங்களில் மட்டும் கொரோனா சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால் அந்த இரண்டு மாநிலம் மட்டும் கொரோனா இல்லாத மாநிலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.