குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாரை பிடிக்க CBCID போலீசார் சன்மானம் அறிவித்துள்ளனர்.
குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை முகப்பேரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சிபிசிஐடி போலீசார் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டார்கள்.
ஜெயக்குமார் யாரிடம் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சிபிசிஐடி விசாரித்து வரும்நிலையில் இந்த சோதனையில் சுமார் 10 மணி நேரம் வரை நடைபெற்றது. இதில் ஜெயக்குமார் வீட்டில் இருந்து லேப்டாப் , பெண் ட்ரைவ் , 60_க்கும் மேற்பட்ட பேனாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து CBCID போலீசார் கூறுகையில் , டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஜெயக்குமார் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் , துப்புக்கொடுக்க எண்களையும் CBCID போலீசார் வெளியிட்டனர்.
அதில் , 94981 05810 ,94441 56386 , 99402 69998 , 94438 84395 , 99401 90030 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று CBCID தெரிவித்துள்ளது. மேலும் ஜெயக்குமார் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். CBCID போலீசார் கைப்பற்றியது முக்கிய ஆதாரமாகவும் பார்க்கப்படுகின்றது.
சன்மானம் அறிவித்து ஜெயக்குமாரை பிடிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இந்த வழக்கு தமிழகத்தில் மிக பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஜெயக்குமார் பாலிடெக்னிக் விரிவுரையாளர் முறைகேடு வழக்கில் கைது ஆகாமல் நீதிமன்றம் ஜாமீன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.