Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளிலும் சிலம்பக் கலை வளர வேண்டும்!

தனியார் பள்ளிகளில் சிலம்பம் விளையாட்டை ஆரம்பித்துவிட்டதைப் போல, கூடிய விரைவில் அரசுப் பள்ளியிலும் தொடங்கிவிடுவார்கள் என சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பத்தூர் அருகே கிருஷ்ணசாமி பள்ளி வளாகத்தில் அய்யப்பாக்கம் பார்க் வர்க்கர்ஸ் அசோசியேஷன், மருதுபாண்டியர் சிலம்ப பாசறை சார்பில் தமிழர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய சிலம்ப சம்மேளத்தின் தலைவரும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் ஆணையருமான ராஜேந்திரன் கலந்துகொண்டார்.

அவருக்கு மாணவர்கள் சாலையில் சிலம்பம் சுற்றியவாறு மலர்த்தூவி உற்சாக வரவேற்பளித்தனர். இதனையடுத்து விழாவில் சிலம்பக் கலைகளில் ஒன்றான தீப்பந்தம், தஞ்சை குத்து வரிசை, தேவர் கம்பு, வால் வீச்சு, சுருள் வாள், மடுவு ஆகியவற்றை மாணவ, மாணவிகள் செய்துகாட்டி அசத்தினர்.

இது வந்திருந்த பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. முன்னதாக ஆணையர் ராஜேந்திரனுக்கும் சிலம்பக் கலைகளில் சிறந்து விளங்கிவரும் கலைஞர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிலம்பம் சுழற்றி அசத்திய மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் கேடயம், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி ஊக்குவித்தனர்.

விழா முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேந்திரன், “அரசு பல விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. அதில் சிலம்பம் முதன் முறையாக கடந்த 10 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் விளையாடுகிறார்கள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சிலம்ப வீரர்களுக்கு மாநில, தேசிய அளவில் வெற்றிபெற்றவர்களுக்கு 25 ஆயிரம், 50 ஆயிரம், 1 லட்சம் தருவதற்கான திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இது பிரபலமாகிவருகிறது. விளையாட்டை எந்தப் பள்ளியிலும் முக்கியமாகக் கருதுவது இல்லை. ஆனால் தற்போது தனியார் பள்ளியில் சிலம்பம் ஆரம்பித்திருக்கிறார்கள். இது கூடிய விரைவில் அரசுப் பள்ளியிலும் ஆரம்பிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

Categories

Tech |