லண்டனில் மூன்று இடங்களில் சில்மிஷம் செய்த மர்ம நபர் குறித்த புகைப்படம் சிசிடிவியில் கிடைத்துள்ளது.
லண்டனில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி 14 வயதுடைய சிறுமி ஒருவர் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின் இருக்கையில் ஒரு நபர் அமர்ந்திருந்தார். அந்த மர்ம நபர் சிறிது நேரம் கழித்து காரணம் எதுவும் இல்லாமல் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமியை தலையில் தாக்கினார். பின்பு மோசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு பேருந்திலிருந்து இறங்கி சென்றார்.
அதன்பின் அதே நாள் மதியம் 12.30 மணிக்கு அந்த மர்ம நபர் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு திருடுவதற்காக சென்றுள்ளார். ஆனால் அவரால் அங்கு திருட முடியவில்லை. அதனால் அங்கிருந்த பெண் பணியாளர் ஒருவரை தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடிச் சென்றார். இதற்கு மறுநாள் இரவு 8 மணி அளவில் அந்த மர்ம நபர் மீண்டும் ஒரு பேருந்தில் பயணித்தார். அங்கு பேருந்து ஓட்டுனரை முகம்,தொண்டையில் தாக்கி தப்பியோடியுள்ளார்.
மூன்று இடங்களிலும் அடையாளம் தெரியாத அந்த மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் வந்து சென்ற இடங்களில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ள அவரது முகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.