சிலுவைகளை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏ.வெள்ளோடு பகுதியில் இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்படும் கல்லறை தோட்டம் உள்ளது. இந்த கல்லறை தோட்டத்தில் உள்ள சிலுவைகள் ஒவ்வொன்றிலும் இறந்தவர்களின் பெயர் எழுதப்பட்டிருக்கும். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் அந்த இடத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி நவம்பர் 2 – ஆம் தேதி கல்லறை திருநாளை முன்னிட்டு வழிபாடு நடத்தி வருவர். இந்நிலையில் ஏ.வெள்ளோடு பகுதியில் இருக்கும் கல்லறை தோட்டத்தில் மர்ம நபர்கள் புகுந்து அங்கு நடப்பட்டிருந்த 30 சிலுவைகளை உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனை மறுநாள் காலையில் அந்த வழியாக சென்ற சில பேர் சிலுவைகள் சிதறிக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதியில் உள்ள மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் கல்லறைத் தோட்டத்தில் குவிந்த அனைத்து பொதுமக்களும் சிலுவைகளை உடைத்த மர்ம நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த இடத்திற்கு வந்த ஊர் நாட்டாண்மை யாக்கோபு மற்றும் மணியக்காரர் அருளானந்து ஆகிய இருவரும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். அதன்பிறகு அங்கிருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அந்த ஊர் நாட்டாண்மை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிலுவைகளை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.