சென்னை சவுகார்பேட்டையில் உள்ள உத்தம் சந்த் என்பவரிடமிருந்து, சுமார் 70 கிலோ வெள்ளிக் கொலுசு, வெள்ளிக் கட்டிகள் ஆகியவற்றை ஒரு கும்பல் வாங்கியுள்ளது. அதனுடன் நான்கு லட்சம் ரூபாயுடன் சேலம் செல்வதற்காக சவுகார்பேட்டையிலிருந்து ஆட்டோவில் (TN04 AF 6870) கோயம்பேடு வந்துள்ளார்.
மெட்ரோ அலுவலகம் அருகில் கே.பி.என். டிராவல்ஸ் பேருந்துக்காகக் காத்திருந்தபோது, அவ்வழியே ரோந்து சென்ற கோயம்பேடு காவல் துறையினர் சந்தேகத்தின் பெயரில் நபர்களை விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர்கள் கொண்டுவந்த பொருள்களுக்கு உரிய ஆவணம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.
மேற்படி நபர்களையும் அவர்கள் கொண்டுவந்த பொருள்களையும் விசாரணைக்காக கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதில் தொடர்புடைய சேலத்தைச் சேர்ந்த சுகுமார், கார்த்திக், மணிகண்டன் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.