Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு நடத்தும் ‘மாநாடு’ – படையெடுக்கும் நட்சத்திரங்கள்..!!!

சிம்பு, வெங்கட் பிரபு கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தில் புதிதாக நான்கு முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர்.

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப்படத்தை சுரேஸ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரயதர்ஷன் நடிக்கிறார். மூத்த இயக்குநர்களும் நடிகர்களுமான பாரதி ராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

ரிச்சார்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சிம்பு பிறந்தநாளான நேற்று படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி இப்படத்தில் சிம்பு ‘அப்துல் காலிக்’ என்னும் இஸ்லாமிய இளைஞர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

maanaadu

இதனிடையே படத்தில் நடிக்கும் கூடுதல் நடிகர்களின் விவரத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி, நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, டேனியல் பாப் ஆகியோர் மாநாடு படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தை அலங்கரிக்க உள்ளனர்.

maanaadu

‘மாநாடு’ படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகளால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் இணைந்துள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Categories

Tech |