முன்னணி நடிகர் சிம்பு நாடகத்தில் நடிக்க ஆசைப்படுகிறார் என்று பிரபல நடிகர் கூறியுள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் முன்னணி நடிகர் சிம்பு நடித்துவரும் திரைப்படம் ‘மாநாடு’. அரசியலை மையமாக வைத்து பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பிரேம் ஜி, எஸ்.ஜே. சூர்யா, ஏ.எஸ்.சந்திரசேகர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் நடித்து வரும் ஒய்.ஜி.மகேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிம்பு குறித்து கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “சினிமாவைப் பற்றி அனைத்தும் அறிந்தவர் சிலம்பரசன். அவர் மிகவும் திறமையானவர். தற்போது உருவாகிவரும் மாநாடு திரைப்படம் அவரது திரையுலக பயணத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதே போல அவர் கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்தால் மிகப் பெரிய இடத்திற்கு சென்று விடுவார். குறிப்பாக என்னைப் போன்ற நாடக கலைஞர்கள் கையாளும் பாணியான புதுப்புது விஷயங்களை ஸ்பாட்டிலேயே கற்றுக் கொள்வார். மேலும் இந்த படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்த பிறகு உங்களுடன் சேர்ந்து நான் ஒரு நாடகம் நடிக்க வேண்டும் என்று கூறினார். அது நடந்தால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.