சிங்கப்பூரில் மக்கள் தொகை 51 ஆண்டுகளுக்கு பின் சரிந்துள்ளதாக தேசிய மக்கள் தொகை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் நாட்டில் வேலைக்காக குடியேறுபவர்களின் எண்ணிக்கையால் மக்கள் தொகையானது அதிகரித்திருந்தது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக கடந்த 51 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்கள் தொகையானது சரிந்துள்ளது. குறிப்பாக கடந்த 1970ஆம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி இதுவே ஆகும். மேலும் கடந்த ஜூன் மாதம் தேசிய மக்கள் தொகை மற்றும் திறமை பிரிவினர் சிங்கப்பூரில் நடத்திய கணக்கெடுப்பில் சென்ற ஆண்டை காட்டிலும் 4.7 சதவிகிதம் சரிந்து மக்கள் தொகையானது 54,50,000 ஆக உள்ளது.
குறிப்பாக சிங்கப்பூரில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை குறைவதே மக்கள் தொகை சரிவில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் கொரோனாவால் வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் குறைந்ததால் சிங்கப்பூரிலும் குடியேறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தற்போது சிங்கப்பூரில் குடிமக்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 0.7 சதவிகிதம் குறைந்து மக்கள் தொகையானது 35,00,000 ஆக உள்ளது. மேலும் நிரந்தர குடியிருப்புவாசிகளின் எண்ணிக்கை 6.2 சதவிகிதம் குறைந்து மக்கள் தொகையானது 4,90,000 ஆக உள்ளது. அதுமட்டுமின்றி நிரந்தர குடியுரிமையற்ற மக்கள் தொகையானது 10.7 சதவிகிதம் குறைந்து மக்கள் தொகையானது 14,70,000 ஆக உள்ளதாகவும் தேசிய மக்கள் தொகை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.