சிங்கப்பூரில் ஊரடங்கு மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் லீ ஹ்சியன் லூங் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மே 4ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,125 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 1,111 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிங்கப்பூரில் இதுவரை 801 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்த ஊரடங்கு உத்தரவை அந்நாட்டில் “சர்க்யூட் பிரேக்கர்” என்று பெயரிட்டுள்ளனர். எனவே ஜூன் 4ம் தேதிவரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் இதுவரை 2,496,660 (24.96 லட்சம்) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை உயிரிழப்புகள் 171,240 (1.71 லட்சம்) ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 655,888 (6.55 லட்சம்) ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், ஈரான் உள்ளிட்ட நாடுகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.