கர்நாடாக மாநிலம் பெங்களூர் சஞ்சய்நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொழிலதிபர் கிருஷ்ணா வசித்து வருகிறார். இவரிடம் சந்தோஷ் என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். மேலும் உதவியாளராக பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் ஷியாம் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இதைதவிர தொழிலாளியாக ஈசுவரப்பா என்பவர் அங்கு பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 3 பேரும் கிருஷ்ணாவின் வீட்டில் ஒரே அறையில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் 3 பேரும் தங்களது அறையில் ஒன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஈசுவரப்பா மேல் ராஜேஷ் தண்ணீரை ஊற்றியதாக தெரிகிறது. அந்த தண்ணீர் சந்தோஷ் மீதும் தெறித்துவிட்டது. இதனால் ராஜேஷ், சந்தோஷ் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் திடீரென சந்தோஷின் உதட்டை பிடித்து ராஜேஷ் கடித்துள்ளார்.
இதன் காரணமாக சந்தோஷின் உதடு துண்டாகி ரத்தம் வந்துள்ளது. இதனையடுத்து ராஜேஷ் அங்கிருந்து ஓடிவிட்டார். அதன்பின் ஈசுவரப்பா, சந்தோஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.