அமீரகத்தில் 3 வயது முதல் 17 வயது உடைய 900 சிறுவர், சிறுமிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சினோபார்ம் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
சிறு குழந்தைகளுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட அபாயம் இருப்பதால் அமீரகத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மூன்று வயது நிறைவடைந்த குழந்தைகளுக்கும் அமீரக அரசு தடுப்பூசி போட முடிவு செய்தது.
இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் தடுப்பூசி போடுவதால் குழந்தைகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட கூடாது என்பதற்காக 3 வயது முதல் 17 வயது உடைய குழந்தைகளில் சினோபார்ம் தடுப்பூசி எந்த அளவு நோய் எதிர்ப்பு தன்மையை கொடுக்கும் என்ற ஆய்வும் தொடங்கியது.
அபுதாபி சுகாதாரத்துறையின் ஒத்துழைப்பில் சர்வதேச மருத்துவ விதி முறைகளை கடைப்பிடித்து அமீரகத்தில் வசித்து வரும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த 3 முதல் 17 வயது உடைய 900 சிறுவர் மற்றும் சிறுமிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் முதல் சுகாதார அமைச்சகத்தால் குழந்தைகளுக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
அதன் பிறகு நோய் எதிர்ப்பு தன்மை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளியானது. அதன்படி சுகாதார அமைச்சகம் 3 வயது முதல் 17 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு அவசர பயன்பாடு மற்றும் உள்நாட்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் சினோபார்ம் தடுப்பூசியை போட்டுக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.