ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அது திட்டமிட்ட சதி என்று தெரியவந்துள்ளது.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே கடந்த வாரம் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அவரின் இறுதி சடங்கு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இருக்கும் சதி திட்டம் தெரியவந்திருக்கிறது.
ஷின்சோ அபேயை சுட்டு கொலை செய்த யமகாமி என்ற நபர் தங்கி இருந்த இடத்திலிருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், பிரதமரை கொலை செய்வதற்கு முன்பாக தன் துப்பாக்கி எவ்வளவு திறன் கொண்டது என்பதை அறிய அந்த நபர் சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து நாரா என்னும் பகுதியில் இருக்கும் ஐக்கிய தேவாலயத்திற்கு உரிய கட்டிடத்தில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் துப்பாக்கியால் சுடப்பட்டு துளைக்கப்பட்ட பல அடையாளங்கள் இருந்துள்ளது.
எனவே முன்பே திட்டமிட்டு அதற்காக பயிற்சி மேற்கொண்டு தான் முன்னாள் பிரதமரை அந்த நபர் சுட்டுக் கொன்றுள்ளார் என்பது உறுதியானது. மேலும், அவர் சுடப்பட்ட இடத்திலிருந்து சுமார் 90 மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கட்டிடத்திலும் தோட்டாக்கள் துளைக்கப்பட்ட அடையாளங்களை காவல்துறையினர் கண்டறிந்தனர்.