குடியரசு தின விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து 73-வது குடியரசு தின விழா நடைபெற்றுள்ளது. இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் 18 அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 338 நபர்களுக்கு பாராட்டு சான்றுகளையும், 119 காவல்துறையினருக்கு தமிழக முதலமைச்சரின் பதக்கங்களையும் வழங்கி கவுரவித்துள்ளார்.
பின்னர் 54 பயனாளிகளுக்கு 37,93,184 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி உள்ளார். இதற்கிடையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருக்கும் காந்தி சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனை அடுத்துக் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொல்காப்பியர் தெருவில் இருக்கும் லோகநாதன் என்ற சுதந்திரப் போராட்டத் தியாகியின் வீட்டிற்கு சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகியோர் நேரில் சென்று சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்துள்ளனர்.