பக்ரீத் பெருநாளில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம் இவர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு இறுதியில் இவர் இரண்டாவது மனைவி அசாரா மூலம் ஒரு ஆண் மகன் பிறந்தது. இஸ்மாயில் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அரபியர்கள். இஸ்மாயில் பால்ய பருவத்தை அடைந்த போது அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள் இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டார். இதைப்பற்றி இஸ்மாயிலிடம் கூறிய இப்ராஹிம் அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்த பொழுது சிஃப்ராயில் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தார்.
அதோடு ஒரு ஆட்டை இறக்கி வைத்த இறைவன் இஸ்மாயிலுக்கு பதில் அந்த ஆட்டைப் பலியிடுமாறு இப்ராஹிமிர்க்கு கட்டளையிட்டார். இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு முக்கிய பண்டிகையில் ஒன்றான பக்ரீத் திருநாள் வரும் 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
வழக்கமாக பக்ரீத் பண்டிகைகளில் இஸ்லாமியர்கள் அனைவரும் மசூதிகளுக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கமாகும். தற்போது நாடெங்கும் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பல மாநிலங்களில் நிலவி வருகிறது. இருந்தாலும் சில மாநிலங்களில் பக்ரீத் தினத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பக்ரீத் தொழுகையை மசூதி மற்றும் திடல்களில் தனி மனித இடைவெளியுடன் நடத்திக்கொள்ள தமிழக அரசு விரைந்து அனுமதி தரவேண்டும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.