சிரியா ஜனாதிபதி பஷர் அசாத்திற்கும் அவரது மனைவி அஸ்மாவிற்கும் கொரோனா தொற்று உறுதியானதால் இருவரும் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா ஜனாதிபதி பஷார் அசாத்திற்கும் அவரது மனைவி அஸ்மாவிற்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் PCR என்று அழைக்கப்படும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் தம்பதியருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. தற்போது சிரியா ஜனாதிபதி அலுவலகம் இதுகுறித்து தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், ” ஜனாதிபதியும் அவரது மனைவியும் தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர்.
இருவரும் 2 அல்லது 3 வாரங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்வார்கள். மேலும் அவர்கள் வீட்டிலிருந்தபடியே பணிகளையும் மேற்கொள்வார்கள் ” என்று கூறியுள்ளது. சிரியாவில் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,000 . அங்கு 1063 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சிறிது நாட்களுக்கு முன்பு தான் சிரியாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எத்தனை பேருக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறித்து முழு தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.