சிறுமியை கடத்திச்சென்று விஷம் கொடுத்து கொலை செய்த காதலன் உள்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த சிறுமி கடந்த மாதம் மாயமானார். இதனையடுத்து சிறுமியை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காணாமல் போன சிறுமியும் தும்பைப்பட்டி பகுதியில் வசிக்கும் நாஹூர் ஹனிபா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் காவல்துறையினருக்கு சிறுமி நாஹூர் ஹனிபாவுடன் சென்றிருக்கலாம் என எழுந்த சந்தேகத்தின் பேரில் அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் நாஹூர் ஹனிபாவின் தாயார் மதினாபேகம் கடந்த 3-ஆம் தேதி மயக்க நிலையில் இருந்த சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்பதைத்தார். இந்நிலையில் தனது மகளின் நிலையை கண்டு பதறிப் போன சிறுமியின் பெற்றோர் அவரை உடனடியாக மேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியின் உடலை பரிசோதனை செய்துவிட்டு மிகவும் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவரின் ஆலோசனையின்படி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே காவல்துறையினர் நாஹூர் ஹனிபாவை கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த விசாரணையில் நாஹூர் ஹனிபா கூறியதாவது, நானும் அந்த சிறுமியும் காதலித்து வந்தோம். இந்நிலையில் என் காதலியை என் நண்பர் பெருமாள் கிருஷ்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். அதன் பின்னர் அங்கிருந்து ஈரோடு மாவட்டத்திலுள்ள எனது சித்தப்பா இப்ராகிம் வீட்டிற்கு அழைத்து சென்றேன். அதற்கு என்னுடைய சில நண்பர்கள் உதவினர். அங்கு சிறுமியை தங்க வைத்திருந்தேன். இந்நிலையில் எனது தாயார் என்னிடம் தொடர்பு கொண்டு சிறுமியை அழைத்துச் சென்றதாக ஊருக்குள் பேசிக் கொள்கின்றனர். இதுகுறித்து பிரச்சினை ஏற்பட்டுவிடும் என கூறினார்.
இதனை வைத்து நான் அந்த சிறுமியை பயமுறுத்துவது போல் பேசி இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தேன். இதற்காக எலி மருந்து வாங்கி வந்திருந்தேன். அதனை சிறுமியை மட்டும் சாப்பிட வைத்தேன். ஆனால் நான் அதை சாப்பிடவில்லை. அதன்பின் சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மதுரைக்கு அழைத்துச் சென்று என் தாயாரிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டேன். அதன் பின் எனது தாயார் அந்த சிறுமியை அவரது வீட்டில் ஒப்படைத்தார். இவ்வாறு நாகூர் ஹனிபா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நாகூர் ஹனிபா, மதுரை திருநகர் பகுதியில் வசிக்கும் நண்பர் பிரகாஷ், பெருமாள் கிருஷ்ணன், ராஜாமுகம்மது, தாயார் மதினாபேகம், தந்தை சுல்தான் அலாவுதீன், சித்தப்பா சாகுல் ஹமீது மற்றும் ரம்ஜான் பேகம் ஆகிய 8 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.