பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் காதலனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் அருகில் 15 வயது சிறுமி வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றார். இந்நிலையில் மாணவியின் தாய்- தந்தை இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்து விட்டனர். இதனால் மாணவியின் தாயார், மகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து பாட்டி வீட்டில் வசித்து வந்த மாணவிக்கும், அப்பகுதியைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவர் ஒருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அதன்பின் மாணவன் ஆசை வார்த்தைகளை கூறி மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாணவியின் தந்தை தனது மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால் மகளை மட்டும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் தாயார் மகளை மீண்டும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து மீண்டும் மாணவிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் 2 நாட்களுக்கு முன்பு அவருடைய தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நடந்த பரிசோதனையில் மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவியை அவரது தந்தையும், கல்லுரி மாணவனும் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதன்பின் அவர்கள் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி 2 பேரையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.