சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
சேலம் மாவட்டத்திலுள்ள தம்மநாயக்கன்பட்டி பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2017-ஆம் வருடம் தேவராஜ் 9 வயது சிறுமியை கரடு பகுதிக்கு தனியாக அழைத்து சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தேவராஜை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேவராஜிக்கு ஆயுள் தண்டனையும், 35 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு கூறினார்.