சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 தொழிலாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது உறவினர் வீட்டிற்கு சாப்பாடு கொண்டு சென்று கொடுத்து விட்டு திரும்பி வரும் போது வழியில் ஜெய்சங்கர் மற்றும் குணசேகரன் ஆகிய 2 தொழிலாளிகளும் சிறுமியை வழிமறித்துள்ளனர். அதன்பின் சிறுமியை இரண்டு பேரும் சேர்ந்து கடத்திச் சென்று அருகில் இருந்த கோவிலுக்கு பின்புறம் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனால் மன உளைச்சலில் சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இது பற்றி அறிந்த சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெய்சங்கர் மற்றும் குணசேகரன் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்ததால் நீதிபதி எழிலரசி தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்தத் தீர்ப்பில் சிறுமியை கடத்திய குற்றத்திற்காக குணசேகரனுக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும், தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாத சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு பிறகு ஜெய்சங்கருக்கு 10 வருடம் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனையும் வழங்கி நிதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியை இரண்டு பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சாகும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி எழிலரசி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 நாட்களுக்குள் மாவட்ட கலெக்டர் மாநில அரசின் திட்டங்களின் கீழ் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி எழிலரசி உத்தரவிட்டுள்ளார்.