Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமியின் மீது சுடும் பாலை ஊற்றிய நிதி நிறுவன ஊழியர்கள்… தொடரும் மைக்ரோ நிதி நிறுவனங்களின் அட்டூழியங்கள்…!!

சுடும் பாலை சிறுமியின் மீது நிதி நிறுவன ஊழியர்கள் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாங்குடி பகுதியை சேர்ந்த தம்பதியினர் அர்ஜுனன்- கலாவதி. இவர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகில் டீக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தனியார் மைக்ரோ நிதி  நிறுவனத்தில் 35 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர் . மாதந்தோறும் தொடர்ந்து தவணை கட்டி வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக குடும்ப சூழல் காரணமாக தம்பதியரால் தவணையை சரியாக கட்ட முடியவில்லை. இதனால்  தம்பதியர்கள் நேற்று முன்தினம் 1950 தவணைக்கு 1300 ரூபாய் கட்டியுள்ளனர். மீதி பணம் 650 ரூபாயை நேற்று கட்டியுள்ளனர்.

அப்போது ஜனவரி மாதத் தவணையும்  சேர்த்து கட்ட வேண்டும் என்று நிதி நிறுவன ஊழியர்கள் தம்பதியிடம் வற்புறுத்தியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது டீ கடையில் இருந்த சுடும் பாலை எடுத்து தம்பதியரின் கண்முன்னே அவர்களது மகளின் மீது நிதி நிறுவன ஊழியர்கள் ஊற்றியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சிறுமியை மீட்டு அவரது பெற்றோர்கள் உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.  சிறுமிக்கு  தற்போது மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூறுகையில்,” பணம் கட்ட முடியாத சூழ்நிலையில்  உள்ள பொதுமக்களை  தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அடியாட்களை கொண்டு மிரட்டி வருகின்றனர். மேலும்  தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர்” என்று தெரிவித்தார்.  இதுகுறித்து அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் கூறுகையில், “கந்துவட்டிகாரர்களை காட்டிலும் மைக்ரோ நிதி நிறுவனங்கள் பொது மக்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர். அவதூறாக பேசி அசிங்கப்படுத்துகின்றனர். தற்போது உச்ச கட்ட அராஜகமாக சிறுமி மீது சுடும்  பாலை ஊற்றி காயப்படுத்தியுள்ளனர். இவர்கள் மீது காவல்துறையினர்  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் மாதர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்றனர்.

Categories

Tech |