சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூங்காநகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கிரிசன் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து பிரியதர்ஷினி வேறு ஒரு வாலிபருடன் தனியாக குடித்தனம் நடத்தி தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலுள்ள கழிப்பறையில் கிரிசன் மயங்கிய நிலையில் கிடந்தான். இதனைப் பார்த்த பிரியதர்ஷினி அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கிரிசனை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார்.
ஆனால் கிரிசனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் பிரியதர்ஷினியிடம் நடத்திய விசாரணையில் கிரிசன் வெந்நீர் போடுவதற்காக வைத்திருந்த ஹீட்டரை தொட்டதால் மின்சாரம் தாக்கி இறந்தான் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிரிசன் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.