சிறுவன் தன்னைக் கடித்த பாம்பை அடித்து அதனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகனாம்பேட்டை பகுதியில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏழு வயதுடைய தக்ஷித் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் தனது பாட்டி வீட்டிற்கு சென்று அங்குள்ள வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது திடீரென கொடிய விஷமுள்ள பாம்பு ஓன்று இந்த சிறுவனை கடித்து விட்டு ஓடியது. இதனால் அந்த சிறுவன் அதனை துரத்தி சென்று அடித்த பிறகு தான் தன்னை கடித்தது விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுவன் தன்னை கடித்த பாம்பை கையில் எடுத்துக் கொண்டு பெற்றோர் உதவியுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனிடம் மருத்துவர்கள் கொடிய விஷமுள்ள பாம்பை எதற்காக கையில் கொண்டு வந்தாய் என்று கேட்டுள்ளனர். அதற்கு சிறுவன் பாம்பை கையில் கொண்டு வந்தால் தானே என்னை எது கடித்தது என்று உங்களுக்கு தெரியும் என்று மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் கொடிய பாம்பு விஷத்தை முறிக்கும் சிகிச்சையை சிறுவனுக்கு மருத்துவர்கள் ஒரு வாரகாலம் அளித்துள்ளனர். இதனையடுத்து பூரண குணம் அடைந்து தற்போது சிறுவன் வீடு திரும்பியுள்ளார்.