மீன் பிடிக்க சென்ற சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு கிராமத்தில் பள்ளி மாணவர்களான மைதீன் அரசு மற்றும் யோகேஷ் ஆகிய இரண்டு பெரும் ஓடையில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதினால் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அப்போது இரண்டு பேரும் கத்தி கூச்சலிட்டதில் அவர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர் மைதீன் அரசு ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து ஓடையில் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதிகளில் தற்காலிகமாக யாரும் செல்லாத வகையில் முள்வேலி தடுப்பு அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த ஏ.எம். முனிரத்னம் மருத்துவமனைக்கு சென்று மைதீன் அரசு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க கலெக்டருக்கு தொலைபேசி மூலமாக தெரிவித்து அதற்கான ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.