இரவு நேரத்தில் கிராம தலைவரை அரிவாளால் வெட்டிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் வாணிய குடியில் வசிப்பவர் பாண்டி. இவர் பெரியகோட்டை மறுதானி கிராமத் தலைவாராக இருக்கிறார். சம்பவம் நடந்த அன்று இரவு பாண்டி தாலுகா அலுவலகத்தில் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவர் தன்னுடன் 4 பேரை அங்கு கூட்டிக்கொண்டு வந்துள்ளார். பாண்டியிடம் அவர்கள், சிவா மணல் அள்ளுவதை அதிகாரிகளுக்கு நீதான் தகவல் கொடுக்கிறாயா என்று கேட்டு தகராறு செய்துள்ளனர்.
திடீரென அவர்கள் பாண்டியை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதில் படுகாயமடைந்த பாண்டியை அங்கிருந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் காவல் துறையினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அதில் அஜித்,சிவா ஆகிய 2 பேரை கைது செய்து உள்ள நிலையில் மற்றவர்களை தேடி வருகின்றனர்.