மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் திட்டம் இல்லை என பா.ஜ.கவின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான திரு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. இதற்கு பாஜக உடன்படாததால் பாஜக சிவசேனா கூட்டணி முறிந்தது. இதனைத்தொடர்ந்து கொள்கை வேறுபாடு கொண்ட காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் சிவசேனா கை கோர்த்தது.
சிவசேனா தலைவர் திரு உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றார். தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நடந்து வருகிறது. திடீர் திருப்பமாக சிவசேனா மூத்த தலைவர் திரு சஞ்சய் ராவர் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னவிஷ்சை நேரில் சந்தித்து பேசினார்.
இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக சிவசேனா கூட்டணி அமைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை பாஜக மறுத்துள்ளது. இந்நிலையில் சாவுனா பத்திரிக்கையின் பேட்டி ஒன்றுக்காக இந்த சந்திப்பு நடைபெற்றதாக சிவசேனா விளக்கமளித்துள்ளது.