தூத்துக்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர்
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த 18 பேர் தனியார் வேன் ஒன்றில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். வேன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த கருங்குளம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரு வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் விபத்தில் காயமடைந்த 12 பேர் நெல்லை அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்து ஏற்பட காரணம் என சொல்லப்படுகிறது. அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதற்கிடையே தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கோபாலன் விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.இது குறித்து செய்துங்க நல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.