குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராடிவருகின்றனர். உத்தரப் பிரதேசத்திலுள்ள 20 மாவட்டங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. இதுகுறித்து டிஜிபி ஒ.பி. சிங் கூறுகையில், “ஐந்து உயிரிழப்புகள் இதுவரை நடந்துள்ளன. பிஜ்னோரில் இருவரும் மீரட், சம்பல், பிரோசாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.
கான்பூரில் ஒரு உயிரிழப்பு நடந்துள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால், அது அதிகாரப்பூர்வமற்ற தகவலாக உள்ளது. காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் யாரும் உயிரிழக்கவில்லை. காவல் துறையைச் சேர்ந்த 50 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது” என்றார். போராட்டத்தால் உத்தரப் பிரதேசத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முசாபர் நகரில் 12 வாகனங்களை தீ வைத்து எரித்துள்ளனர். பெரும்பாலான இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. இதையடுத்து, காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவிவருகிறது.