ஆப்கானில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே உள்நாட்டுபோர் நடந்து வருகின்றது. இந்த சணடயில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவளித்து வருகின்றன.
இதற்கிடையே, உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலிபான்கள் – அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமைதி ஒப்பந்தத்தின்படி வெளிநாட்டு படையினரின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். ஆனால், உள்நாட்டுப் படையினர் மீதான தாக்குதலை தொடர்வோம் எனவும் தலிபான்கள் தெரிவித்தனர். இதையடுத்து அரசுப்படையினர் மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு குண்டூஸ் மாகாணம் (northern Kunduz) குவாலி-ஐ-சல் மாவட்டத்தில் இருக்கும் தலிபான் மறைவிடங்களை குறிவைத்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடியாக தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் 6 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும், 7 பயங்ரவாதிகள் காயமடைந்தனர்.