திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் எஸ்தர் பேபி.. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தன்னுடைய கணவரை பிரிந்து வேலன் நகரிலுள்ள தாய் சகாயராணி – தந்தை அப்துல் காதர் ஆகியோருடன் குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார்.. இந்தநிலையில், பாக்யராஜ் என்பவருடன் சகாயராணி திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தது மகள் எஸ்தர் பேபிக்கு தெரியவர, தனது தாயை அவர் எச்சரித்தார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த சகாயராணி, தன்னுடைய தம்பி சேவியர் அருண் மற்றும் கள்ள உறவு வைத்திருந்த பாக்யராஜ் ஆகியோருடன் இணைந்து 2014 ஜூன் 14ஆம் தேதி எஸ்தர் பேபியை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்து விட்டு உடலை குடியிருந்த வீட்டுக்கு உள்ளேயே புதைத்து விட்டனர்.. பின்னர் தனது மகளை காணவில்லை என வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனில் சகாயராணி புகாரளித்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த சூழ்நிலையில், கடந்த மார்ச் மாதம் சென்னை பள்ளிக்கரணை போலீஸ் ஸ்டேஷனில் கொலை குற்ற வழக்கு ஓன்றில் சேவியர் அருண் கைது செய்யப்பட்டார். இதையறிந்த எஸ்தர் பேபியின் தந்தை அப்துல் காதர், சேவியர் அருண் திருப்பூருக்கு வந்தபோது தான் தன்னுடைய மகள் காணாமல் போனதாகவும், அதனால் சேவியர் அருணிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஸ்டேஷனில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
இதையடுத்து சேவியர் அருணை திருப்பூர் வீரபாண்டி போலீசார் விசாரணைக்கு எடுத்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சகாயராணி, பாக்யராஜ், சேவியர் அருண் ஆகிய 3 பேரும் சேர்ந்து எஸ்தர் பேபியை கொலைசெய்து பின் வீட்டுக்குள் புதைத்ததை ஒப்புக் கொண்டார்.
அதனைத்தொடர்ந்து நேற்று வீரபாண்டி போலீசார் மற்றும் மருத்துவத் துறையினர் சகாய ராணியின் வீட்டுக்குச் சென்று எஸ்தர் பேபியின் உடலைத் தோண்டி எடுத்தனர். மருத்துவக் குழுவினர் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தினர். மேலும், ஆய்வு நடத்துவதற்கு சில எலும்புகளை அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.. திருமணத்தை மீறிய உறவுக்காக பெற்ற தாயே சொந்த மகளை கொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.