ஈரோடு அருகே கூலி தொழிலாளியை 12 பேர் சேர்ந்து வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் கே எஸ் நகரில் இரண்டு நாட்களுக்கு முன்பு நாகராஜ் என்ற கூலித்தொழிலாளி பின்தலையில் பலத்த வெட்டுக்காயம் மற்றும் ஆங்காங்கே கத்திகளுடன் இறந்து கிடந்ததை அடுத்து கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த வகையில் நேற்றைய தினம் அதிகாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த போது,
காரை வேகமாக இயக்கிய ஐந்து பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது அவர்களை நிறுத்தி காரை சோதனை செய்தபோது அதில் கத்தி அரிவாள் இருந்தன. இதையடுத்து கொலைக்கான காரணம் இவர்களாக இருக்கலாம் என்று அவர்களிடம் விசாரிக்கையில், அந்தக் கூட்டத்தில் மதன் என்பவர் திடுக்கிடும் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அதில் என் பெயர் மதன் நான் ஒரு தொழிலதிபர்.
தொழில் செய்து வருகிறேன். மேலும் கஞ்சாவும் அவ்வப்போது விற்று வருகிறேன். எனது நண்பர்களுக்கு நான் அடிக்கடி பணம் கொடுத்து செலவு செய்வது வழக்கம். ஊரில் உள்ளவர்களுக்கும் கடன் கொடுப்பேன். அந்த வகையில் கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் வடிவேல் மர்லின் என்பவர் என்னிடம் தகராறு செய்த போது நான் அவரை தாக்கி விட்டதாகவும் அவரது நண்பர் சரவணனிடம் சென்று என்னை பற்றி புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து அவர் என்னிடம் கடன் கேட்டு தகராறு செய்தார். இதனால் எனக்கு ஆத்திரம் வந்தது, அவரை கொலை செய்ய எனது நண்பர்கள் 11 பேருடன் திட்டமிட்டேன். அதன்படி கருங்கல்பாளையம் பகுதியை அடுத்த கேஎஸ் நகருக்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூற சரவணன் வருவதாக கூறினார். இதையடுத்து ஈரோடு சந்தைக்கு சென்று 1 அரிவாள் நான்கு கத்திகளை வாங்கி காரில் பதுக்கி வைத்திருக்க,
சரவணன் அவரது நண்பர்களான கணேசன் நாகராஜன் ஆகியோருடன் ஸ்கூட்டரில் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது எனது நண்பன் ஒருவன் கத்தியை எடுத்துக் கொண்டு முன்னோக்கி அவர்களை தாக்க சென்றபோது சுதாகரித்துக் கொண்ட அவர்கள் ஸ்கூட்டரை கீழே போட்டு ஓடத் தொடங்கினர். கணேசனும் சரவணனும் ஒன்றாக தப்பி ஓடிய நிலையில், நாகராஜ் தனியாக சிக்கிக்கொண்டார்.
அவரை சரமாரியாக வெட்டிக் கொன்ற கும்பல் அவரது ஸ்கூட்டரை தண்ணீருக்குள் தள்ளி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து 12 பேரும் தனி தனி கும்பலாக பிரிந்து தலைமறைவாகலாம் என்று முடிவு செய்ததன் பேரில் பிரிந்து சென்றனர். அந்த வகையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஆகிய நாங்கள் செலவுக்கு பணமில்லாமல் தத்தளித்தோம். ஆங்காங்கே வழிப்பறி செய்தும், செலவுக்கு காணாததால் சரணடைந்து விடலாம் என்று முடிவு செய்து ஈரோடு நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கும் வழியில்தான் நீங்கள் எங்களைப் பிடித்து விட்டதாக அவன் வாக்குமூலம் அளித்துள்ளான். 12 பேர் சேர்ந்து ஒரு கூலித் தொழிலாளியை கொன்ற செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.