ஆசியக்கோப்பை 5ஆவது போட்டியில் வங்கதேசத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி
15 ஆவது ஆசிக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பிபிரிவில் இன்று 5ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷானக பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆட களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 183 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அபிஃப் ஹொசைன் 39 (22) ரன்களும், மஹேடி ஹசன் 38(26) ரன்களும் எடுத்தனர் மேலும் மஹ்முதுல்லா 27 ரன்களும், ஷகீப் அல் ஹசன் 24 ரன்களும், மொசாடெக் ஹூசைன் 24 ரன்களும் எடுத்தனர்.. கிட்டத்தட்ட அனைவருமே தங்களது பங்கிற்கு அடிக்க 183 ரன்கள் கிடைத்தது. இலங்கை அணி தரப்பில் கருணாரத்ன, ஹஸரங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்ரீலங்கா அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிஷாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் இருவரும் களமிறங்கினர். இருவரும் விக்கெட் விடாமல் நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில், எபடோட் ஹொசைன் வீசிய 6ஆவது ஓவரில் நிசாங்கா 20 ரன்களில் ஆட்டம் இழக்க அதே ஓவரில் உள்ளே வந்த அசலங்கா 1 ரன்னில் நடையை கட்டினார்..
அதனைத் தொடர்ந்து வந்த தனுஷ்கா குணதிலகா 11 ரன்களிலும், பானுகா ராஜபக்சே 2 ரன்களிலும் வெளியேறினர். இருப்பினும் மறுமுனையில் குசல் மெண்டிஸ் சிறப்பாகவே ஆடி வந்தார்.. அதன் பிறகு கேப்டன் தசுன் ஷானகா – குஷல் மெண்டிஸ் இருவரும் இணைந்தனர். இந்த ஜோடி விக்கெட் இழக்காமல் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தது. இருவரும் 54 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்த நிலையில், 15 ஆவது ஓவரில் 37 பந்துகளில் 60 ரன்கள் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் எடுத்திருந்த குசால் மெண்டிஸ் ஆட்டம் இழந்தார்.
இதையடுத்து வந்த வணிந்து ஹசரங்காவும் 2 ரன்கள் எடுத்து வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷானகா 33 பந்துகளில் 45 ரன்கள் (3 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்த நிலையில், 18 வது ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. போட்டியில் வெற்றிக்கணிப்பு இருபக்கமும் மாறி மாறி வந்தது.
இதையடுத்து 16 ரன்கள் எடுத்திருந்த கருணாரத்ன 19ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் ரன் அவுட் ஆனார். அப்போது வெற்றிக்கு 7 பந்துகளில் 12 ரன்கள் தேவை.. கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்தது. களத்திற்கு வந்த அசிதா பெர்னாண்டோ கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார்.. இதனால் கடைசி 1 ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட ஸ்பின்னர் மஹேதி ஹசன் வீசிய முதல் பந்தில் மகீஷ் தீக்ஷனா அடிக்க முற்பட லெக் பைஸ் ஆல் 1 ரன் கிடைத்தது. அடுத்து பெர்னான்டோ பவுண்டரி அடித்தார்..
பின் வெற்றிக்கு 4 பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில், பெர்னான்டோ அடித்து விட்டு 2 ரன்கள் எடுத்தனர்.. அந்த பால் நோ பால் ஆனது. பெர்னான்டோ 10 (3) ரன்களுடனும், தீக்ஷனா 0 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இறுதியில் 19.2 ஓவரில் 8 விக்கெட் இழந்து 184 ரன்கள் அடித்து ஸ்ரீலங்கா அணி வெற்றி பெற்றது. வங்கதேச அணி தரப்பில் எபடோட் ஹொசைன் 3 விக்கெட்டுகளும், தஸ்கின் அகமது 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த போட்டியில் வங்கதேச அணியினர் 4 முறை நோபால் வீசியது மட்டுமில்லாமல் 17 ரன்கள் எக்ஸ்ட்ராவாக கொடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.