Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvNAM : முதல் தகுதிச்சுற்று போட்டி….. 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய நமீபியா..!!

டி20 உலகக்கோப்பை முதல் சுற்று போட்டியில் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவிலுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இறுதியில் இரு டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

இந்தியா உட்பட 8 அணிகள் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று முதல் சுற்றுப் போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் கீலாங் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச முடிவு செய்தார். அதன்படி நமீபியா அணியின் தொடக்க வீரர்களான மைக்கேல் வான் லிங்கன் 3,  திவான் லா காக் 9 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.. அதனை தொடர்ந்து சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிகோல் லோஃப்டி-ஈடன் 20 ரன்கள், ஸ்டீபன் 26 ரன்கள், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் 20 ரன்கள், டேவிட் வைஸ் 0 என எடுத்து அவுட் ஆகினர்.

அப்போது நமீபியா அணி 14.2 ஓவரில் 93/6 என இருந்தபோது, கடைசியில் ஜான் ஃப்ரைலின்க் மற்றும் ஜேஜே ஸ்மிட் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கடைசி ஓவரில் லாஸ்ட் பந்தில் கடைசி ஜான் ஃப்ரைலின்க் (28 பந்துகளில் 4 பவுண்டரி உட்பட 44 ரன்கள்) ரன் அவுட் ஆனார்.. கடைசி கட்ட அதிரடியால் 20 ஓவர் முடிவில் நமீபியா அணி 7 விக்கெட் இழந்து 163 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் மட்டும் நமீபியா 68 ரன்கள் சேர்த்தது. ஜேஜே ஸ்மிட் 16 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் பிரமோத் மதுஷன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும் களமிறங்கினர். இதில் குஷால் மெண்டிஸ் 6 ரன்களில் டேவிட் விசா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதனை தொடர்ந்து ஷிகாங்கோ வீசிய நான்காவது ஓவரில் 2 மற்றும் 3ஆவது பந்துகளில் பதும் நிசாங்கா 9, குணதிலகா 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து தடுமாறியது.

அதனைத் தொடர்ந்து தனஞ்செயா டி சில்வா 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு பனுக ராஜபக்சே மற்றும் கேப்டன் தசுன் ஷானகா இருவரும் ஜோடி சேர்ந்து சிறிது நேரம் தாக்குபிடித்த நிலையில், ராஜபக்சே 20 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன் பின் ஹசரங்கா 4,  தசுன் ஷானகா 29, கருணாரத்னே 5, பிரமோத் மதுஷன் 0, சமீரா  என அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 19 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மகேஷ் தீக்ஷனா 11 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். நமீபியா அணியில் டேவிட் விஷா, பெர்னார்ட் ஷால்ட்ஸ், பென் ஷிகாங்கோ, ஜான் ஃப்ரைலின்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனால் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

Categories

Tech |