காணாமல் போன சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மோகனூர் கிராமத்தில் சலவை தொழிலாளியான இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 5 வயதில் மாதேஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாதேஷ் விளாரிபட்டியில் இருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது மாதேஷ் திடீரென காணாமல் போய்விட்டார். அதன் பின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.
இது குறித்து இளையராஜா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் குமார் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் மாதேஷின் சடலம் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.