மின்சாரம் பாய்ந்து 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோவிலம்பாக்கம் சத்யா நகர் 7வது தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷியாம் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷியாம் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து வாட்டர் ஹீட்டர் மூலம் அதனை சூடு செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து தண்ணீர் சுட்டு விட்டதா என விரலை வைத்து பார்த்த ஷியாம் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ஷியாமை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.