நண்பருடன் குளித்து கொண்டிருந்த போது கால்வாயில் மூழ்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வேப்பம்பட்டு பகுதியில் முரளிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரனேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரனேஷ் தனது நண்பரான வேல் சரவணன் என்பவருடன் தொட்டிக்கலை என்ற இடத்தில் இருக்கும் கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து குளித்து கொண்டிருக்கும் போது நண்பர்கள் இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிறுவர்களை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் வேல் சரவணனை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. அதற்குள் பிரனேஷ் கால்வாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரக்கிளையில் சிக்கியிருந்த சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.