செல்போன் வாங்கி தராததால் ஆறாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 13 வயதுடைய ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் ராகுல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வேலைக்கு சென்ற கணவன் மனைவி இருவரும் திரும்பி வந்து பார்த்தபோது தங்களது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பூந்தமல்லி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராகுல் தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் நீ படிக்காமல் இருப்பதால் செல்போன் வாங்கித் தர முடியாது என்று கூறி அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராகுல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.